Uncategorized

அரசியலில் ஈடுபட மாட்டேன்… மக்கள் மன்றத்தைக் கலைத்த நடிகர் ரஜினி…

ரஜினிகாந்த் மக்கள் மன்றம் இனி ரசிகர் மன்றமாக முன்புபோல் செயல்படும் என்ற நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது, மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு முன்புபோல் ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மக்கள் நலப்பணிக்காக முன்புபோல் ரஜினி ரசிகர் மன்றம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது என்றம் அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். ஆனால், கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என்றும், வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் தனக்கில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம், மக்கள் நலப்பணிக்காக முன்புபோல, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.