அரசியல்தமிழ்நாடு

நீர்வள ஆதாரத்தை அதிகரிக்க அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…

திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கும்படி துறை அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் நீர்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்பாசன திட்டங்கள், செயலாக்கம், பணிகள் முன்னேற்றம், புதிய திட்டங்கள் உருவாக்குதல் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

திருச்சி மண்டலத்தில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம், கட்டளைக்கால்வாய், இராஜவாய்க்கால், நஞ்சை புகலூர், ஆதனூர் குமாரமங்கலம் மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை, கல்லணைக் கால்வாய், காவேரி கால்வாய் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்பு திட்டப்பணி முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள், விழுப்புரம் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், வெள்ளத்தணிப்பு திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்பு சுவர்கள் அமைக்கும் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நீர்வளத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகள் உருவாக்குவது, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளைச் செப்பனிட முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்வது குறித்த திட்ட மதிப்பீடுகளை விரைவில்சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.