திமுக இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்துங்கள்… நெல் கொள்முதலை விரைவுபடுத்துங்கள்… அரசுக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்…
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை கசக்கிப்பிழியும் திமுக இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தி, நெல்கொள்முதல் செய்வதை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்குவதாகவும் விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் கூறும் செய்திகள் வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில், பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும்நிலையில் குறைந்த அளவே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்த அளவே நெல் கொள்முதல் நடைபெறுவதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளார். நெல் மூட்டைக ளகொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும், ஆளும் கட்சியினரின் கருணைப் பார்வை இல்லாததால், நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அடாவடி செயல்களால் மக்களின் வயிற்றுப்பசி போக்கும் விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பசியைப்போக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை கசக்கிப்பிழியும், இடைத்தரகர்களை முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
