“பெர்பாமென்ஸ்-ல் கோளாறு வைத்து கொண்டு பாஜக மீது பழி போடுவதா?” எஸ்.ஆர்.சேகர் காட்டம்…
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி என்றும், பாஜக மீது குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இதற்கு அதிமுக தலைமை பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாகவும், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் சிறுபான்மை ஓட்டக்களை இழந்துவிட்டதற்கு பாஜக கூட்டணியே காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன், அதே போன்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்து கூட்டணியில் சண்டை உருவாக்கும் முயற்சி என குற்றம் சாட்டினார்.

பாஜகவுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார் என்றும், தேர்தலில் தோற்றப்பின், பாஜக மீது குற்றம் சாட்டுவது ஏற்க முடியாது என்றார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், அப்போதுதான் குழப்பம் இல்லாமல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல முன்னாள் அமைச்சர்கள் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது, சி.வி.சண்முகம் சரியாக பெர்ஃபாமென்ஸ் செய்யாததால் தோற்றதாக கூறினார். தன்னுடைய செயலற்ற தன்மையை, தன்னுடைய பெர்மாமென்ஸ் கோளாறுகளை பாஜக மீது சி.வி.சண்முகம் தூக்கி போடுகிறார் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆர்.கே. சேகர், பாஜகவை வசைப்பாடுவதை ஏற்க முடியாது என்றும் அதிமுக தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார். இந்த கருத்தை அதிமுக தலைமை ஏற்கவில்லை என்றால், சி.வி.சண்முகம் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் இந்த கருத்தை சி.வி.சண்முகம் சொன்னதால் அதிமுக தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
