நீட் விவகாரம்: பதில்மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு…
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிரான வழக்கில் ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு, குழு அமைத்து உத்தர பிறப்பித்திருந்தது. அரசின் உத்தரவை எதிர்த்து, தமிழக பாஜக பொது செயலாளர் கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்தது. மேலும் அரசியல் விளம்பரத்துக்காகவே பாஜக மனு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தங்ளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சந்தீப் பானர்ஜி, செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஏராளமான இடையீட்டு மனுக்கள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தனை மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை என்றாலும், இவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டியது அவசியமானது என்று நீபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த வழக்கில் மத்திய அரசு இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
