தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கொச்சைப்படுத்தி பேசிய சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்..!

தமிழ் திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா .இவர் அகரம் பவுண்டேஷன் சார்பில் வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் நடிகர் சூர்யா . சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை தி.நகரிலுள்ள கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம் கூறியதாவது :

நீட் தேர்வுக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பு & இறையாண்மையை கொச்சைப்படுத்தி, பொய்யைப் பரப்பும் வகையிலும் பேசிவரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.