தமிழ்நாடு நிலையான வளர்ச்சியை அடைய வேண்டும்… மாநில வளர்ச்சி குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…
மாநில வளர்ச்சி கொள்கை குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர், தலைமை செயலாளர், மாநில வளர்ச்சி குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் இராம சீனுவாசன், பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு தீனபந்து, டி.ஆர்.பி. ராஜா எம்எல்ஏ, நர்த்தகி நடராஜ் மருத்துவர் கு.சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும் என்றார். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக் கூடாது என்றும் நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும் என கூறினார். அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு என்றும் முந்தைய ஆட்சியில் இதுபோன்ற சலுகைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே பொறுப்பை உணர்ந்து செயல்பட அறிவுறுத்தியதாக தெரிகிறது. மாநில வளர்ச்சி கொள்கை குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினை காட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
