தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி…
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நாட்டிலேயே முதலாவது இடத்திற்கு கொண்டு வர உறுதி எடுத்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டு கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஹூண்டாய் நிறுவனம் கார் தயாரிப்பு மட்டுமின்றி, சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாக கூறினார். கொரோனா நிவாண நிதிக்கு 5 கோடி ரூபாய் தந்து உதவிய ஹூண்டாய் நிறுவனத்துக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு ஹூண்டாய் கார் தொழிற்சாலையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு 5-வது இடத்தில் இருக்கிறது. 3-வது இடத்திற்கு கொண்டு வருவேன் என்று உறுதி எடுத்தார். அதன்படி அந்த இலக்கை அடைந்தார்கள். அதேபோல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதலாவது இடத்திற்கு நான் கொண்டு வருவேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதாக முதலமைச்சர் கூறினார்.
தொழில் வளர்ச்சி மூலமாக நாடும் மக்களும், சமூகமும் முன்னேறுகிறது. எனவே தொழிற்சாலைகளை வழக்கமாக புத்தகமாக பார்க்காமல், வாழ்க்கையாக பார்த்து எங்களின் செயல்பாடு அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். தங்களைப்போலவே மற்ற தொழில் நிறுவனங்களும், தொழில் தொடங்க ஹூண்டாய் நிறுவனம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
