கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ ஆக்சிஜன் வாங்குவதற்கும், கொரோன தொற்றின் 3-வது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது வரை 353 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள், பொதுநிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதுவரை பெறப்பட்டுள்ள நிதியில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்தவமனைகளுக்கு வழங்குவதற்கும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை, ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்கான கண்டெயினர்கள் வாங்குவதற்கும் 50 கோடி ரூபாயை வழங்கிட முதலமைச்சர் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்று இதர மிருத்துவ கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயையும். கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருநது கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்த தொற்றின் மூன்றாம் அலை தொடரபான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


