“கொரோனா தடுப்பு நடவடிக்கை மிகச் சிறப்பு”… தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் கட்ட அலை தீவிரமாக பரவிய நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்றன. இதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. தடுப்பூசி முகாமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தொடங்கி வைத்தார். முகாமில், உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் துணை தலைவர், அரசு தலைமை வழக்கறிஞர், மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, சமீபகாலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக பாராட்டினார். கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றம், மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள்; அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கூறினார்.
