அதிமுக பொது செயலாளராக சசிகலா வர வேண்டும்?! தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக தீர்மானம்…!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டதன்படி சசிகலா ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்று தூத்துக்குடி அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. இந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த சசிகலா, அண்மை காலமாக அதிமுகவினரோடு தொலைபேசியில் உரையாடி வருகிறார். அவரது இந்த பேச்சு, அதிமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், சசிகலாவுடன் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனாலும், சசிகலா தொடர்ந்து அதிமுகவினரோடு பேசி வருகிறார்.
இந்த நிலையில், அதிமுக பொது செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்ற கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சசிகலாதான் அதிமுக பொது செயலாளராக வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்காமல், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் செய்த பல்வேறு மாற்றங்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களையும், புகழேந்தியையும் அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா வரவேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
