“கல்வி சேனலை பார்க்க மாணவர்களை அனுமதியுங்கள்”… தலைமை ஆசிரியர் தண்டோரா அடித்து அறிவுறுத்தல்…
திருச்சியில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி, வீதி வீதியாக சென்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில், மான்யா நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவிசந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவ – மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருப்பதும், பெற்றோர்கள் இதர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை அறிந்த தலைமை ஆசிரியர் ரவிசந்திரன் வேதனை அடைந்தார்.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் பயனை முழுமையாக பெறும் வகையில், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார். தலைமை ஆசிரியரான ரவிசந்திரன், தண்டோராவை தோள் மீது மாட்டியவாறு, கிராமத்தில் வீதி வீதியாக சென்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியருடன், உடன் பணிபுரியும் ஆசிரியர்களும், பள்ளி மாணவர்கள் சிலரும் உடன் சென்றனர்.
அப்போது பேசிய தலைமை ஆசிரியர், கல்வி தொலைக்காட்சி மூலமாக எந்தெந்த நேரத்தில் என்னென்ன பாடங்கள் ஒளிபரப்பாகிறது என்பது குறித்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தண்டோரா மூலம் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
