அரசியல்தமிழ்நாடு

ஹெச்.ராஜா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும்… எல். முருகன் அதிரடி…

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது அவரது கட்சியினர் அளித்த புகார் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகமாக கமலாலயத்தில் அவரது உருவபடத்துக்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலில அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய தலைவர்கள்தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும் என்றும், உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையைக் கருதி கூட்டணி அமைக்கப்படும் என்றார். பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றார்.

பாஜக நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தொடர்பாக தனியார் பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாஜகவில் அதுபோல் எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்றார். அது தொடர்பாக தனியார் பத்திரிகைக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோல், பெட்ரோல் – டீசல் விலையில் 5 ரூபாயை முதலில் குறைக்க வேண்டும் என்று கூறினார். பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றும் எல் முருகன் கூறினார்.