அரசியல்தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் : புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்! முழு விவரம் இதோ…

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது . தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கடசியில் இருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.

முக்கிய பொறுப்பு வகித்த நிர்வாகிகள் விலகியதை அடுத்து , மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் விரைவில் செய்வேன் என கமல்ஹாசன் கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 26) நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டச்பை தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

சிவ.இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். ‘நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்பவர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.