வரதட்சணை கொடுக்க மாட்டோம்… கேரள பெண்கள் எடுத்த அதிரடி முடிவு…
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி விஸ்மயாவுக்கு கடந்த ஆண்டு கிரண்குமார் என்பவருடன் திருமணமான நிலையில், சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பிறகு வரதட்சணை கேட்டு கிரண்குமார் கொடுமைப்படுத்தியதாகவும், கடுமையாக தாக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் தாய் வீட்டுக்கு சென்ற விஸ்வமயாவை, மீண்டும் கிரண்குமார், தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பிரச்சனை எதுவும் இல்லாமல் வாழலாம் என்று கிரண்குமார் கூறியதை நம்பி கணவர் வீட்டுக்கு சென்ற விஸ்வமயாவுக்கும் மீண்டும் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளார். இந்த நிலையில், விஸ்வமயா சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு தான் பட்ட கஷ்டங்களை, தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பியிருந்தார். விஸ்வமயாவின் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் கிரண்குமார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிரண்குமாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலவித கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்வமயா வழக்கு கேரளாவையே உலுக்கி வரும் நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா, ஆலப்புழாவைச் சேர்ந்த சுசித்ரா ஆகியோர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கேரள இளம் பெண்கள், வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று தங்கள் வீடுகளில் துண்டு பிரசுரம் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரள பெண்களின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




