சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு…
வாழப்பாடி அருகே போலீஸ் தாக்கியதில் வியாபாரி இறந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருகில் உள்ள தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லும் சேலம் வாசிகள், அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தருமபுரி எல்லைக்கு சென்று, மது அருந்திவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முருகேசனின் வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முருகேசன், போலீசாரிடம் முன்னுக்குமுன் முரணாக பதிலளித்தும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக சிறப்பு காவல் ஆய்வாளர் பெரியசாமி, கையில் இருந்த லத்தியால், முருகேசனை தாக்கியிருக்கிறார். இதில் மயங்கி விழுந்த முருகேசன், உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி முருகேசன் உயிரிழந்தார்.
வியாபாரி முருகேசன் உயிரிழந்த தொடர்பாக விசாரித்து வருவதாகவும், சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
