சினிமா

உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்! ‘வலிமை’ படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள் .

ஹ்யூமா குரேஷி, கார்த்திகேயா, அச்யுத் குமார், சுமித்ரா உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்து வருகின்றனர். இது தவிர ‘வலிமை’ படம் குறித்துப் பெரிய அளவில் தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், படக்குழுவினர் எதுவுமே தெரிவிக்காத விரக்தியில் தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்கு பதிலாக ’வலிமை அப்டேட்’ என்று கேட்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து போனி கபூர் மட்டுமல்லாது படத்துக்குத் தொடர்பில்லாத எல்லோரிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்க ஆரம்பித்தனர்.

பிப்ரவரி மாதம், படத்தில் நாயகனுக்கான அறிமுகப் பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா பகிர்ந்திருந்தார். இது அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்றும், ஒடிசாவில் திருவிழாக் காலங்களில் வாசிக்கும் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலில் பங்கெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Valimai Update' Reaches WTC Final Too; Actor Ajith Kumar Fans Put Up Poster  in Southampton

மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக, இந்தச் சூழலில் எந்தவிதமான கொண்டாட்டமும் சரியாக இருக்காது என்பதால் இந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ‘வலிமை’ அப்டேட் வேண்டும் என்று சில ரசிகர்கள் ஒரு தாளில் எழுதிக் காட்டினர்.

இந்நிலையில், ’மாநாடு’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் சமூக வலைதளத்தில் உரையாடினர். இதில் ’மாநாடு’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் கலந்துகொண்டார். இதில் அவரிடம் ‘வலிமை’ படத்தைப் பற்றிக் கேட்டபோது, படத்தில் நாயகன் அறிமுகப் பாடல் நாட்டுப்புற மெட்டில் அமைந்திருக்கும் என்றார். இயக்குநர் வெங்கட் பிரபு, இந்தப் பாடல் ரசிகர்களை ஆடவைக்கும் என்று கூறினார். விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

மேலும், உணர்ச்சிகரமான, அம்மா பாசத்துக்கான பாடல் ஒன்றும் இருப்பதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். பல மாதங்களுக்குப் பின் ’வலிமை’ திரைப்படம் குறித்த அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் பலரும் இதைப் பெரிதளவில் பகிர்ந்து வருகின்றனர்.