அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா தாய் அல்ல…. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்…
அதிமுகவில் சசிகலா குழப்பம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா தாய் அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக விமர்சித்தார்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில அதிமுக தோல்வி அடைந்து, எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுகவினருடன் சசிகலா பேசி வருவதற்கு, அதிமுக தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவரிடம் யாரும் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவரது செயல் வேடிக்கையாக உள்ளது என்றார். அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டைக்குழல் துப்பாக்கியைப்போல் ஓ.பி.எஸ்., – ஈ.பி.எஸ். உள்ளனர் என்றும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சிக்குள் பிரச்சனையை ஏற்படுத்த சசிகலா முயற்சித்து வருவதாகவும், ஜெயலலிதாவே சசிகலாவை நீக்கினார் என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது என்றும் அதற்கு காரணம் சசிகலாதான் என்றார். நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை ஜெயலலிதா நம்பினார்; ஆனால் சசிகலா நம்பிக்கையாக நடக்கவில்லை என்றும் துரோகம்தான் செய்தார் என்று கூறினார். அதிமுகவில் சசிகலா குழப்பம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், தன்னை தாய் என்று கூறிக்கொள்ளும் சசிகலா, அதிமுகவைப் பொறுத்தவரை அவர் தாய் அல்ல ஒரு பேய் என்றும் நத்தம் விஸ்வநாதன் மிக காட்டமாக விமர்சித்தார்.
