அரசியல்தமிழ்நாடு

‘நீட்’ தற்போது வரை நடைமுறையில் உள்ளது… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

நீட் தேர்வு என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்றும் அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றும் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் நீட் தேர்வு என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ளதாக கூறினார். அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தனியார் நீட் பயிற்சி மையங்களில் கட்டண குறைப்பு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வை முதன் முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, ஆட்சியில் இருந்த கருணாநிதி, நீதிமன்றம் சென்று அதற்கான தடையாணை பெற்றார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினும், நடவடிக்கை எடுப்பார் என்றார்.

நீட் தேர்விற்கு எதிராக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானம் குடியரசு தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதனால்தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தெளிவான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பதும், மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.