நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது… அரசியல் தலைவர்கள் தவறான பிரச்சாரம்… பாலகுருசாமி அறிக்கை…
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து சில அரசியல் தலைவர்கள் தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும், அவர்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக நீட் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்து விட்டது என்றம், உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டும் என்றம் உறுதி செய்து விட்டதாக கூறினார். எனவே நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது என்றும் சில அரசியல் தலைவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக நீட் தேர்வு கறித்து தவறான பிரச்சாரங்களையும், உறுதி மொழிகளையும் வழங்கி வருவதாகவும், அதற்கு பொதுமக்களம், பெற்றோர்களும் இரையாகிவிட வேண்டாம் என்றும் அவர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் நோக்கத்துக்காக சிலர் அவ்வாறு பேசுவதாகவும், நீட் தேர்வின் சரியான நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் மருத்துவ கல்வியின் தரம், நுழைவுத் தேர்வுகளின் அவசியம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் என்றும் மிக காட்டமாக கூறியுள்ளார்.
நீட் தேர்வு தற்கொலைகளைத் தூண்டுவதாக தவறான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும், மாணவி அனிதா நீட் தேர்வு முடிவு வந்த உடனேயே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சுயநலனுக்காக தூண்டப்பட்டு உச்சநீதிமன்றத்துக்கு இழுத்து செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் அதனால் ஏற்பட்ட அவமானங்களே அவரை தற்கொலைக்கு தூண்டின என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டிலேயே நீட் தேர்வை தமிழ்நாடு மட்டும எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது என்றும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாரகி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாலகுருசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
