குற்றம்தமிழ்நாடு

சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்தனர் .

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை வந்த சிவசங்கர் பாபாவுக்கு நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.

பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ம்) தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார் .