அரசியல்இந்தியா

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன் முறையாக டெல்லி சென்று பிரமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் முன் வைத்துள்ளார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருப்பதாக தெரிவித்தார். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செய்லபாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேகதாது திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.