பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி… எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் துவக்கம்…
சென்னை எழும்பூர் தாய் – சேய் மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விஜயா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தலாமா? கூடாதா? என்ற சந்தேகங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சென்னை எழும்பூர் தாய் – சேய் நல மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணியினை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயா துவக்கி வைத்தார். மருத்துவமனையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த தினத்தில் இருந்து 3-வது நாள் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்களின் உடல்நிலையைப் பொறுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.
