கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி… ரூ.25 லட்சம் வழங்கினார்…
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்காக தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி, 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்க அரச பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால், நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
முதலமைச்சரின் கோரிக்கையை அடுத்து, திரையுலகினர், தொழிலதிபர்கள் பலர் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்னறனர். நடிகர் சிவக்குமார் ஒரு கோடி ரூபாயும், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாயும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாயும் வழங்கினர். இயக்குநர்கள் சங்கர்,வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும் திரைப்பிரபலங்கள் பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.
