அரசியல்தமிழ்நாடு

சசிகலாவுடன் உரையாடியவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்… ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அறிவிப்பு…

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவை சேர்ந்த 15 பேரை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான பிறகு, அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில், சில தினங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசி வருகிறார். தான் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் அனைத்து விதமான பிரச்சனைகள் சரியாகும் என்றும் அதிமுகவினரிடம் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இது தொடர்பான ஆடியோ பேச்சு, வலைத்தலங்களில் வெகுவாக பரவி வருகிறது.

சசிகலாவின் தொலைபேசி பேச்சுக்கு அதிமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை அபகரித்து விடலாம் என்ற வஞ்சக வலையை நாளும் சசிகலா விரித்துக் கொண்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 பேர் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி, தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளர் அழகர் சாமி உள்ளிட்ட 15 பேர் அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்