ஆபாச படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டல்… கல்லூரி மாணவி தற்கொலை…
பணம் தராவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று காதலன் மிரட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் லாவண்யா (19), தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். மானாமதுரையைச் சேர்ந்த கேசவகுமார் என்பவர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். இந்த நிலையில் லாவண்யாவும், கேசவகுமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கேசவகுமார், லாவண்யாவை மிரட்டி பணம் பறித்துள்ளார். தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி லாவண்யாவிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய், 2 சவரண் தங்க நகை உள்ளிட்டவைகளை கேசவகுமார் பறித்து வந்துள்ளார். தொடர்ந்து கேசவகுமார், பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், அவருடன் பேசுவதை லாவண்யா தவிர்த்துள்ளார்.
இதினால் ஆத்திரமடைந்த கேசவகுமாரும் அவரது நண்பர்களும், பணம் கொடுக்காவிட்டால், தனிமையில் இருந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த லாவண்யா நேற்று முன்தினம் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி லாவண்யா நேற்று உயிரிழந்தார். இது குறித்து லாவண்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
