அரசியல்தமிழ்நாடு

இரட்டை வேஷம் போடும் ‘முதல்வர்’… எல். முருகன் விமர்சனம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலையும், ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு நிலையும் எடுப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையாக நிலையில், டாஸ்மாக் கடைகளை அரசு திறப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு, அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலயில் டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரத்தில், திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டாஸ்மாக் கடைகள் திறப்பை எதிர்த்து, பாஜகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலையும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக எல்.முருகன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் பெட்ரோல் விலையைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்.முருகன் கூறினார்.