உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்… கொரோனா பரவும் அபாயம்…
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசின் நிவாரண உதவி வழங்கும் விழாவில், கட்சியினர் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் பொதுமக்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய அரசின் நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளாண்டை திறந்து வைத்தார்.
வால்பாறையில் உள்ள கிரீன் ஹில்ஸ் கலையரங்கில், நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினரும், பொது மக்களும் ஒரே நேரத்தில் கூடினர். இதனால் சிறிய கலையரங்கத்தில் கூட்டம் முண்டியடித்தது. மேடையில் இருந்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை சந்திக்க கூட்டம் அதிகளவில் திரண்டனர்.
உதயநிதியுடன் செல்பி எடுக்க பலர் மேடையில் புகுந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கட்டுப்படுத்த முடியாத கூட்டம் திரண்டதால் சமூக இடைவெளி இன்று காணப்பட்டது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
