அரசியல்தமிழ்நாடு

“அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது”… கட்சி நிர்வாகியிடம் சசிகலா நெகிழ்ச்சி…

அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிமுகவினருடன் சசிகலா பேசி வருவது அதிமுக கட்சி வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று திரும்பிய சசிகலா, சட்டமன்ற தேர்தலில் அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். மேலும் அரசியல் இருந்து விலகுவதாகவும் அவர் கூறினார். அரசியலில் ஒதுங்கி இருந்த சசிகலா, தற்போது அதிமுகவினருடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், அதிமுகவிற்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதை என் உயிரில் இருந்தே பிரிக்க முடியாது. தொண்டர்களுடைய மனக்குமுறலை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நான் எல்லாரிடமும் பேச ஆரம்பித்தேன் என கூறியுள்ளார்.

அதிமுகவினருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய 23 ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவின் இந்த தொலைபேசி பேச்சு, அதிமுக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.