மக்களுக்கான தடுப்பூசியை தனியாருக்கு வழங்கியது ஏன்? திருப்பூர் மாநகராட்சி மீது சுகாதார துறை புகார்…
திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கியதாக திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதார துறை குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கொரோனாவுக்கான தடுப்பூசி இல்லை என்றும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கொரோனா தடுப்பூசி வந்த பிறகே, மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட மக்களுக்கு செலுத்துவதற்காக மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, தனியாருக்கு விற்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு தெரியாமல், திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கியதாக திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதார துறை குற்றம் சாட்டியுள்ளது.
மாநகராட்சியின் 4 ஆம் மண்டலத்தில் இரண்டு மணி நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இப்படி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது நியாயமற்ற செயல் சுகாதார துறை கூறியுள்ளது. புலம் பெயர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்த உத்தரவு உள்ளதாகவும் அதன்படி பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்புசி போடப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றும் எதையும் மறைத்து செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் நிலவும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி, தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா? என விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
