திமுக எம்.எல்.ஏ. அட்டூழியம்… காவல் நிலையத்தில் அதிமுக புகார்…
பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கவிடாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர் தடுப்பதாக வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில், காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாண பொருட்கள் வழங்கி வருகின்றனர். மாவட்ட அதிமுக செயலாளரும், வேளாண் விற்பனை குழு தலைவருமான எஸ் ஆர் கே அப்பு தலைமையில் அதிமுகவினர் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பத்து கிலோ அரிசி உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தனது ஆதரவாளர்களுடன், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவி செய்ய வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு மனம் இல்லை. அவர்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம். ஆனால் அதிமுக செய்யும் உதவியை திமுக சட்டமன்ற உறுப்பினர் தடுக்க பார்ப்பதாக, அவர் குற்றம் சாட்டினார்.
தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமான பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறோம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன், அதிமுக கட்சியினர் மீது பொய் புகார் கொடுக்க வைப்பதாக கூறினார். திமுகவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும், மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கூறினார்.
