ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தம்…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கிடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது. நேற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், நெல்லை மாநகர் பகுதியில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரில், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்படி பழனிசாமிதான் காரணம் என்றும், ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டாம் என்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தன. மேலும், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை செய்யாததால்தான், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களால், இன்று நெல்லை மாநகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துடன் கூடிய இந்த போஸ்டரில், தமிழக எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களிடையே தற்போது போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.
