தமிழ்நாடு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் மர்ம மரணம்… போலீசார் விசாரணை…

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண், மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

சென்னை, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மௌலி. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுனிதாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மே மாதம் 22 ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

22 ஆம் தேதி அன்று மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மௌலி, மீண்டும் 23 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, மருத்துவமனை அறைக்கு சென்று பார்த்தபோது, சுனிதா மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். தானும், ஊழியர்களும் மருத்துவமனை முழுவதும் தேடினர். ஆனாலும், சுனிதா கிடைக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி மாயமானது குறித்து, மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த மௌலி, பின்னர் வீடு திரும்பினார். இதனிடையே ஊரடங்கு காரணமாக மௌலி மீண்டும் மருத்துவமனை செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய் (8.6.2021) அன்று மருத்துவமனையின் 8-வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதை அறிந்து, அந்த உடலை மார்ச்சுவரி கொண்டு சென்றனர். இதனிடையே மனைவி காணாமல் போனதாக தெரிவித்த மௌலிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த மௌலி, இறந்து போயிருப்பது தனது மனைவி சுனிதாதான் என்று அடையாளம் காட்டியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.