குற்றம்தமிழ்நாடு

முழு ஊரடங்கு நேரத்தில் இளம் ரவுடிகள் 3 அடி பட்டா கத்தியால் கேக் வெட்டிகொண்டாட்டம் …! சமூக வலைத்தள வீடியோ வைரல் ஆனதால் இளம் ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு !

கொரோனா பெருந்தொற்றின் அச்சத்தால் நாடு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடைக்கும் வேளையில் முழு ஊரடங்கின்போது சென்னையில் உள்ள கண்ணகி நகரில் சாலையின் இடையே ஸ்கூட்டரை நிறுத்தி இளம் ரவுடி ஒருவர் தனது பிறந்தநாளை 3 அடி நீள பட்டாக்கத்தியால் சக ரவுடிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் .

அவரின் இந்த பிறந்தநாள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டில், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் பிரபல ரவுடி பினு பட்டாக்கத்தியால் 150 ரவுடிகள் புடைசூழ வான வேடிக்கையுடன் தனது பிறந்த நாளை அரிவாளால் வெட்டி கொண்டாடினர்.

ரவுடி பினுவை தொடர்ந்து ரவுடிகள் பலர் தங்களது பிறந்த நாளை அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் கொண்டாடி தங்கள் பகுதியில் நான் தான் ‘கெத்து ’ என்று சூசகமாக மக்களுக்கு பயம் காட்டி வருகின்றனர். இந்த ரவுடிகளை கைது செய்தாலும், மீண்டும் அவர்கள் அதே பாணியில் தான் பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ரவுடிகள் 15 பேர் ஒன்று கூடி முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் எந்த பயமும் இன்றி சாலையின் நடுவே ஸ்கூட்டரை நிறுத்தி ரவுடி ஒருவர் பிறந்த நாள் கேக்கை 3 அடி நீள பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடி உள்ளார்.

அப்போது, அவரது நண்பர்களான ரவுடிகள் ‘ஹாப்பி பர்த் டே டூ யூ மை டியர் டான்’ என்று கூறி தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டாடினர்.இந்த பகுதிக்கு நாங்கள் தான் டான் என்று கூறும் வகையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோவை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கண்ணகி நகர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரவுடியான சுனில்(22) தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து கண்ணகி நகர் போலீசார் ரவுடி சுனில் மற்றும் அவருடன் இருந்த ரவுடிகளான நவீன்குமார்(எ)தொப்பை(21), அப்பு(19), திணேஷ்(20), ராஜேஷ்(21), கார்த்திக்(எ)பீடி(24) ஆகிய 6 பேரை தேடி வருகின்றனர். மேலும், அந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.