“சபாஷ்…! நிரூபிக்கும் வகையிலான செயல்பாடு…!” கோயில் நிலம் மீட்புக்கு இந்து முன்னணி வரவேற்பு…
வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் வரவேற்று பாராட்டியுள்ளார்.
சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்பிலான நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு அதிரடியாக மீட்டது. 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த கோயில் சொத்தை மீட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொறுப்பேற்றவுடன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கோயில் நிலங்கள், நகை என அனைத்தையும் ஆவணப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளதையும், அதை நிரூபிக்கும் வகையிலான செயல்பாடுகளையும் வரவேற்கிறோம்.
போலி ஆவணங்களால், கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்தனர். இவற்றை கவனித்து தக்க நடவடிக்கை எடுத்து, ஒரு கால பூஜைகூட நடக்காமல் உள்ள கோயில்களில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு காடேஸ்வர சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
