பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து… நீதிமன்றம் உத்தரவு…
பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில கடந்த ஜனவரி மாதம் நடந்த பாஜக பொதுக்வட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகியான கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தொடர போராட்டம் நடத்தியதன் காரணமாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கல்யாணராமன், ஜாமீன் கோரி, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கல்யாணராமன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது மனைவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தவறானது என்றும் அவதூறாக பேசியதற்காக குண்டர் சட்டம் போட எந்த விதிகளும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, கல்யாணராமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
