“கிறுக்குத்தனமாகத்தான் பதிலளிப்பேன்”… வேளாண் அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்…
செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு உரிய பதிலளிக்காமல், பொறுப்பற்ற முறையில் பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு விவசாய சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குறுவை சாகுபடி தொடர்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அமைச்சரிடம் செய்தியாளர்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். கேள்விக்கு உரிய பதிலாளிக்காமல், செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னதான் பேசினார் என்றால், இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், கிறுக்குத்தனமாகத்தான் நானும் பதில் அளிப்பேன் என்று கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பொறுப்பற்ற பதிலுக்கு, விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பதிலளித்தது கண்டனத்துக்குரியது. விவசாய துறைக்கு இவர் பொருத்தமானவரா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என்றம் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
