தடுப்பூசி பாதுகாப்பு கவசம் போன்றது… உதாரணத்துடன் அழகாக எடுத்துச்சொன்ன நடிகை வரலட்சுமி
கொரோனா தடுப்பூசி, ஹெல்மெட் போன்றது என்றும், தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்தும் பணியில் தமிக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசி போடும் பணியில் சுகாதார துறை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க நிரந்தர தீர்வு தடுப்பூசி ஒன்றே என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். தடுப்பூசி என்பது ஹெல்மெட் போன்றது என்றும் விபத்து ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்து விடுவோம். அதேபோல் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி இரட்டை வேடத்தில் வரும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
