கொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை : தடுப்பூசி பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்
தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநில அரசுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிதீவிரமாய் உள்ளது .இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநில அரசுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில் உள்ளூர் அளவிலான நோய் கட்டுப்பாட்டு விதிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். குறிப்பாக நோய் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் RTPCR மற்றும் ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும்
மாநில அரசுகள் தொற்று எண்ணிக்கை பற்றிய எந்தவித அழுத்தமும் இன்றி நோய் பாதிப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க ஊக்கப்படுத்தப் பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஊரகப் பகுதிகளில் சுகாதார வளங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் ஊரக பகுதிகளில் சிகிச்சை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை எளிமையான மொழிகளில் விளக்கக் குறிப்புகளுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.
ஊரகப் பகுதிகளில் ஆக்சிஜன் உபயோகத்தை உறுதிப்படுத்த முறையான விநியோகத் திட்டத்தை ஏற்படுத்துமாறும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற மருத்துவ சாதனங்களை முறையாக இயக்க சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
