இந்தியாவிளையாட்டு

தேடப்படும் குற்றவாளி ஆனார்,.. ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்

கொலை வழக்கில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு. இவரை தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், இவருக்கு வயது 37. ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரு பதக்கம் (2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி) வென்ற ஒரே இந்திய நட்சத்திரம் இவர்தான். இவருக்கும் முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணாவுக்கும் ‘மாடல் டவுன்’ பகுதியில் உள்ள வீட்டை காலி செய்வது தொடர்பாக மோதல் இருந்து வந்தது. சுஷில் குமார் குறித்து, சக வீரர்களிடம் சாகர் தவறாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் சாகார் கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டு, டில்லி சத்ராசல் மல்யுத்த அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள ‘பார்க்கிங்’ பகுதியில் சுஷில் குமார், சாகர் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்சுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சாகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் கொடுத்த தகவல் படி சுஷில் குமார், அவரது நண்பர்கள் பயன்படுத்திய ஐந்து கார், துப்பாக்கி, தடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என சுஷில் குமார் விளக்கம் அளித்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி சாகர் மரணம் அடைய, கடத்தல், சதி, கொலை என மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணைக்கு வருமாறு சுஷில் குமாருக்கு சம்மன் அனுப்பினர். இரண்டு முறையும் சுஷில் ஆஜராகவில்லை. இதையடுத்து சுஷில் குமாரை தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசார் அறிவித்தனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில்,’சுஷில் குமாருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும். வீட்டில் சுஷில் குமார் இல்லை. அவரையும், அவரது நண்பர்களையும் தேடி வருகிறோம்,” என்றனர்.

எங்கு சென்றார் சுஷில்

சம்பவத்துக்குப் பின் சுஷில் குமார் ஹரித்துவாரில் ஒரு ஆசிரமத்தில் தங்கினார். அடுத்து ரிஷிகேஷ் சென்றார். பின் டில்லி திரும்பிய இவர், ஹரியானாவில் தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்று டெல்லி போலிசார் தெரிவித்துள்ளனர்.