செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் -டாஸ்மாக் முறைகேடு வழக்கு-லஞ்ச ஒழிப்புத் துறை
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பல்வேறு முக்கிய டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆவணங்களின் ஆய்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததும், செந்தில் பாலாஜி மற்றும் வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில், சென்னை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் டிவிஏசி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
FIR-ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
`தமிழகம் முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டு முதல் சில மாவட்டங்களில் பார்களின் வருவாய் திடீரென குறைந்ததாகவும், அதன் பின்னணியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம்’ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட 284 பார்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டதாகவும், பார் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரூ.17.27 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் FIR-ல் கூறப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். விசாகன் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களான ரதீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பார்கள், மதுபான உற்பத்தி ஆலைகள், பீர் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து டெண்டர் நடைமுறைகளில் பெருமளவில் முறைகேடு செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் இந்த முறைகேடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுள்ளதாக புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மாபெரும் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மண்டலத்தில் ரூ.1.95 கோடியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, மதுப் பிரியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. சாதாரண மதுபான பாட்டில்களுக்கு MRP விலையை விட ரூ.10 முதல் ரூ.100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூ.500 வரை சட்டவிரோதமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு இந்த புதிய எஃப்ஐஆர் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், டாஸ்மாக் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர் தனது செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தியதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
