தமிழ்நாடு

சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் – திருமாவளவன்

நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் சின்னதுரையிடம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது சகோதரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :

“சாதிய, மதவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனியாக ஒரு உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.

நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலை தரும் என நம்புகிறேன். நாங்குநேரி சம்பவம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் இடையே உள இந்த சாதிய வன்மத்தை பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணியை கண்டு பாஜக பயந்து போய் உள்ளது. இக்கூட்டணி உருவானது முதல், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என தெரிவித்தார்.