இந்தியா

14 நாடுகளின் உயர் விருதுகளை பெற்றுள்ள ஒரே பிரதமர் மோடி- அமித்ஷா புகழாரம்

தங்கள் அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் சார்பில் கவுரவ் கோகோய் கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நான் பதிலளிக்கிறேன்.

மக்கள் சபையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து இருக்கிறார்கள். இன்றைக்கு மக்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின் மக்களின் நம்பிக்கை இந்த அளவுக்கு பெற்ற ஒரே அரசு பாஜக அரசு தான். பிரதமர் நரேந்திர மோடி உலக அலவில் பிரபலமான பிரதமராக வலம் வருகிறார். இந்த நாட்டிற்காக பிரதமர் மோடி 17 மணி நேரம் உழைக்கிறார். அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் 30 வருட அரசியல் காலம் குடும்ப அரசியல், ஊழல் மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஜால்ரா தட்டும் அரசியலாகவே இருந்தது. வளர்ச்சியின் அடிப்படையிலான அரசியல் என்பது மோடி அரசால் தான் இந்த நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு உள்ள அதிகாரங்களில் ஒன்று. நரசிம்மராவ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2008ல் எம்.பிக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டது. 1999ல் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தது. ஆனால் நாங்கள் யாரும், எந்த எம்.பிக்கும் பணம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக வாஜ்பாய் தனது நிலைபாட்டை தன் பேச்சின் மூலம் தெளிவுப்படுத்தினார். இதுதான் ஒரு அரசின் வெற்றியை, ஒரு அரசின் குணாதிசயத்தை காட்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல், முறைக்கேடு செய்தாவது தங்கள் அரசை காப்பாற்ற முயற்சிக்கும், ஆனால் பாஜக அரசு அப்படி இல்லை. இதற்கு வரலாறுகளே சான்றுகளாக அமைகின்றன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த அரசின் திட்டங்களை சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். எங்கள் அரசு விவசாயிகளின் கரங்களை வலுப்படுத்தியுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. விவசாயிகளின் கரங்களை வலுப்படுத்தினால், அவர்கள் கடன் வாங்கும் நிலைக்கே தள்ளப்படமாட்டார்கள். விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்கள் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். எதிர்க்கட்சியர் மேடைகளில் பேசுவதும், வாக்குறுதி கொடுப்பதுமாக மட்டுமே இருக்கின்றனர், அதை நிறைவேற்றுவதில்லை. ஆனால் நாங்கள் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். கொரோனா காலத்தில் அரசியலுக்கும் அப்பாற்ப்பட்ட தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்பட்டார்.

தடுப்பூசிகள் வந்தபோது, அதை மோடி தடுப்பூசி என்றும், அதை மக்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் போன்றோர் மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவர்களின் பேச்சை ஓரங்கட்டிவிட்டு, 130 கோடி மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டு, கொரோனாவோடு போராடி வென்றிருக்கிறார்கள். மக்களவையில் ஒரு தலைவர் இருக்கிறார், விதர்பாவில் உள்ள கலாவதியையும், அவரின் ஏழைக் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் இடத்தில் 13 முறை உணவு அருந்தியிருக்கிறார். ஆனால் அந்த 6 ஆண்டு காலத்தில் கலாவதிக்கு அவர் செய்தது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை காங்கிரஸ் கட்சியினர் தான் பேச அனுமதிக்கவில்லை. அப்படியிருக்க எதற்காக பேச்சை தடுக்கிறீர்கள்?. நம் ராணுவ வீரர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் தலை துண்டிக்கப்பட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி அரசில், பாகிஸ்தானுக்கும் நாம் பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தானை பதில் சொல்ல வைத்தோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் புதுகாப்புத்துறையில் ஊழலும், முறைக்கேடுகளும் நிறைந்திருந்தன.

14 நாடுகளின் உயர் விருதுகளை பெற்றுள்ள இந்திய நாட்டின் ஒரே பிரதமர், நம் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். கடந்த 9 ஆண்டுகளில் உலகளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி. மீண்டும் மோடியே பிரதமராக தேர்வாவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, அவர் ஆட்சியில் 2027ல் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக திகழும். பல்வேறு உலக பொருளாதார நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாகவும், மேலும் மேம்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளன. ஜி20 தலைவர்கள் மாநாட்டை நாம் இந்தியாவில் நடத்த, பிரதமர் மோடியின் ஓய்வில்லாத பணிகளே காரணம்” என்றார்.