தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் : அமைச்சராகிறார் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா..!
முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாசர் பால்வளத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுக்கவிக்கப்பட்டு டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக இருப்பவர் டிஆர்பி.ராஜா. இவர் மன்னார்குடி எம்.எல்.ஏவாக உள்ளார். திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி ஆர் பாலுவின் மகனான இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

