ஜம்மு-காஷ்மீரில் வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 4 பொதுமக்கள் பலி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள டாங்கிரியில் நேற்று 3 வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்தார்கள். 6 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே ரஜோரியில் நடந்த பயங்ரவாத தாக்குதலுக்கு எதிராக ஜம்முவில் இன்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. சித்ரா பகுதியில் டிசம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
