அரசியல்தமிழ்நாடு

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து பேசிய பாஜகவினரை கைது செய்ததை கண்டித்து கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் குறித்தும், ஆ.ராசா குறித்தும் இந்து முன்னணி கூட்டத்தில் இழிவாக பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் , தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்தும் இன்று மாலை கோவை சிவானந்தா காலனியில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் சிவானந்தா காலனி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்க வருவதன் காரணமாக இன்று பிற்பகல் முதலே கோவை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.