சினிமா

ரூ.200 கோடி மோசடி வழக்கு- பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு இடைக்கால ஜாமீன்

பிரபல தொழிலதிபரிடம் இருந்து இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் உடைந்தை என்று குறிப்பிட்டு இருந்தது.

இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது முதலில் சுகேஷ் சந்திரசேகர் தன்னை தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர் எனவும் , பழைமை வாய்ந்த அரசியல் தலைவர்கள் குடும்பத்திலிருந்து வந்தவன் எனவும் அறிமுகம் படுத்திக் கொண்டதாகவும் அதற்குப் பிறகு மினி கூப்பர் கார் , விலை உயர்ந்த கடிகாரங்கள், ஹேண்ட் பேக், காலணிகள், பூச்செண்டுகள் உள்ளிட்ட 7 கோடி ரூபாய் பொருட்கள் பரிசளித்ததாகவும் விசாரணையின் போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் கோரிய வழக்கு இன்றைய தினம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சைலேந்திர மாலிக் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோரிக்கையை ஏற்று 50,000 பிணைத்தொகையுடன் இடைக்கால ஜாமினை வழங்கினார். மேலும் இவ்வழக்கில் அமலாக்க துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.