நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் , ஆண்டிற்கு 6 கிராமசபை கூட்டங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நவம்பர் 1ஆம் தேதி “உள்ளாட்சி தினம்” கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அதில் , தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் இனி ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் என்று அறிவித்தார். ஜனவரி 26, மே 1 ,ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ,மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்று முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ” திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி இனி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் . கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது” என்று நினைவு கூர்ந்தார். அத்துடன், ” உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர். உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு உயர்த்தப்படும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்” என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக ஆண்டுக்கு 4 நாட்கள் என ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடந்துவந்த நிலையில் தற்போது 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
