அரசியல்தமிழ்நாடு

புதிய வேளாண் பல்கலைக்கழகத்தை டெல்டா பகுதியில் அமைக்கவேண்டும் அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்ட வேண்டும்..! டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை…

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதியில் புதிய விவசாயக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாமே எனக் கூறியதுடன் அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் விவசாயிகள் மத்தியில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நற்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகவும் கூறினார்.

புதிய விவசாயக் கல்லூரி அமைக்கக்கூடாது என்பது அரசின் நோக்கமல்ல என்றும் நிலம் தான் பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கம் 600 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து பேசிய டி.ஆர்.பி.ராஜா தமிழக அரசு சார்பில் புதிய விவசாயக் கல்லூரி அமைக்கப்பட்டால் அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகத்தை டெல்டா பகுதியில் அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.