திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் 5 மணி நேரம் காத்திருந்து ED அதிகாரிகள் ரெய்டு
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவரது வீட்டில் சோதனை செய்த வருமானவரித் துறை அதிகாரிகள், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில். இன்று திடீரென கதிர் ஆனந்த் எம்பிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை 9 மணிக்கு அதிகாரிகள் சென்ற நிலையில், கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றிருப்பதால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டின் முன் காத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு அமலாக்கத்தூறை அதிகாரிகள் பேசியதை அடுத்து 5 மணி நேர காத்திருப்புக்கு பின் வீடு திறக்கப்பட்டு அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தனது உறவினரை உடன் வைத்துக் கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டதால், வேலூர் மாநகர துணை மேயர் சுனில் குமார் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, காட்பாடி அடுத்த சித்தூர் சாலையில் உள்ள கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. திமுக பிரமுகரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
Read More